க்ளோபல் வில்லேஜ்..!

க்ளோபல் வில்லேஜ்..!

இண்டெர்நெட்டின் வீச்சுல மொத்த உலகமே சுருங்கி ஒரு கிராமமாக மாறுக்கொண்டிருக்கிறது என்கிற கான்சப்ட்டை விளக்குற ஒரு வார்த்தை தான் க்ளோபல் வில்லேஜ்...! 

உலகத்தின் எந்த மூலையில இருக்கிற ஒரு விசயத்தையும் நீங்க பாக்க முடியும், நினைச்சா வாங்க முடியும், யாருடனும் பேச முடியும், 20 வருஷத்துக்கு முன்னாடி இதன் வீச்சு ஆரம்பமான பொழுதுகளில் மிக பிரமிப்பாக இருந்தது. அப்போ பேனா நட்புன்னு ஒரு மேட்டர் இருக்கும். சில வடநாட்டு பத்திரிக்கைகள் அந்த சேவையை செய்யும். அதில் பேனா நட்பில் ஆர்வமுள்ளவர்கள் என சில முகவரிகளை வெளியிடுவார்கள்.. அதில் ஒரு அழகான பெண்ணின்(!?) முகவரியை தேர்ந்தெடுத்து கடிதம் எழுதுவோம். பதில் வந்தா ஆச்சு, வரலைன்னா போச்சு..
 
ஒரு நண்பியின் (ஃபேக் ஐடி பற்றி எல்லாம் அறியாத காலம் அது. பெண் என்றே நம்பினோம்.) கடிதம் கிடைக்க 15 நாள் ஆகும் நிலையில் இருந்து பூமியின் அந்த கோடியில் இருந்த ஒரு பெண்ணுக்கு ஈந்த கோடியில் இருந்து ஒரு நொடியில் ஹாய் சொல்லி பதில் பெற முடிந்தது. இண்டெர்னெட் மூலமா என்னென்னவோ சாதிக்க முடிந்தது. பெரும் புரட்சிகள் நடந்தது, நியாயங்கள் கிடைத்தது, குற்றங்கள் குறைந்தது, காதல்கள் பிறந்தது, கலவிக்கு கூட கண்களும் காதுகளும் போதும் என்கிற புது வடிவம் கிடைத்து மனிதனின் பரினாம வளார்ச்சியே மாறும் அளவிற்கு 20 வருடத்தில் இமாலய மாற்றங்கள்..!

பிலிப்பைன்ஸ் கார பெண்ணுடன் அவங்க நாட்டு சினிமா பாட்டை வாங்கிட்டு நம்மூர்ல அப்போ ஃபேமஸான "வாழை மீனுக்கும் விளாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடலை" அனுப்பி வச்சது நினைவில் இருக்கு. அந்த பாடலை அப்போ அனுப்ப கிட்டத்தட்ட 20 நிமிடம் ஆனது. இப்போ 2 வினாடியில் அனுப்பலாம்.. உலகம் இன்னும் சுருங்கி கொண்டிருக்கிறது...!

இதனால மனித குலம் அதன் அடிப்படை இச்சைகளை விட்டு விலகுமோ? ஏதேனும் மாற்றங்கள் நம்ம காலத்திலேயே நிகழுமோ, இதனால மனித குலத்துக்கே ஏதேனும் தீமைகள் நிகழுமோன்னு எல்லாம் யோசிச்சு காத்திருந்தேன். ஆனால் உண்மையான க்ளோபல் வில்லேஜ் என்னும் சொல்லுக்கு அர்த்தத்தை இப்ப தான் பார்க்க முடியுது. உலகம் சுருங்கி ஒரே கிராமம் ஆனதா... கிராமங்களின் பொது வியாதியான ஜாதி வன்மம், புரளி பேசுறது, அடுத்தவன் வாய்க்குள் கையை விட்டு நோண்டுவது எல்லாம் இப்ப க்ளோபலைசேஷன் ஆகிருக்கு...! மனிதனோட அறிவியல் கண்டுபிடிப்புகளால மனிதனோட அடிப்படை இச்சைகளும் வளர்ந்து அதுவும் க்ளோபலைசேஷன் ஆகிட்டிருக்கு... உலகளாவிய வன்மம்,, உலகளாவிய க்ரோதம், உலகளாவிய பொறாமைகள்...! ஆகா... அற்புதம்..!

அவன் பொண்டாட்டி ஏன் கருப்பா இருக்கா...? இவன் வீட்டு எழவுக்கு ஏன் அவன் போகலை..? சொப்பனசுந்தரியை இப்ப யாரு வச்சிருக்கா போன்ற அதி முக்கியமான சமூக நிகழ்வுக்கு வினையாற்றுவதை காண கண் கோடி வேண்டும். லிங்கவாடி கிராமத்துல எங்க பாட்டா விக்ரமாதித்யன் கதை சொல்லும் போது மந்தை சாவடியில மூக்கை சொறிந்து கொண்டே கேட்டுட்டு இருந்த 1980 காலகட்டம் எல்லாம் நினைவுக்கு வருது. 

இப்ப நான் 20ம் நூற்றாண்டின் அதி முக்கிய கண்டுபிடிப்பான கம்பியூட்டர் முன்னாடி உக்காந்திருக்கேனா இல்ல கிராம சாவடிக்கு முன்னாடி உக்காந்திருக்கேனான்னே தெரியத அளவுக்கு இண்டெர்னெட் ஜன்னலை திறந்தால் ஒரே அடி தடி குழாயடி சண்டையா இருக்கு. 

என்ன அறிவியல் வளர்ந்தாலும் உலகம் சுருங்கினாலும் மனிதனின் அடிப்படை எச்சத்தனங்கள் மாறாமல் இருக்குது. இப்ப தான் மனசுக்கும் சமாதானமா இருக்கு...


Source:

 https://www.facebook.com/100000203163250/posts/pfbid0KLDspgBkzHu6nNFcgxTWfdDb7U6fUsPGS7YPY4MGHyQLkwavvb1uNvEfDbfhNiyxl/?mibextid=Nif5oz

Post a Comment

Previous Post Next Post